அந்த இஸ்லாமிய நண்பர் எனக்கு அறிமுகமானது 1985ல். என்னைவிட ஒரு ஆண்டு மூத்தவர். இனிமையாகப் பேசுபவர். இணக்கமாகப் பழகுபவர். முதன் முதலாக நாங்கள் சந்தித்தது எழும்பூரில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில். அவர் டிக்கெட்டிங் கிளர்க். நான் டைப்பிஸ்ட். நண்பருக்கு ஒரு பழக்கம். ஏதாவது ஒரு விஷயத்தில் நாங்கள் முரண்பட்டால் உடனடியாக ஒரு சவாலை முன்வைப்பார். அப்பழக்கம் நாளடைவில் என்னையும் இலேசாகத் தொற்றிக்கொண்டது. 1990ல் ஒரு நாள் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு சென்றுவிட்டு மெரினாவை நோக்கி நடந்துகொண்டிருந்தோம்.
மதிய நேரம். இருவருக்கும் நல்ல பசி. நண்பரிடம் பணமில்லை. செலவை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அவரை அழைத்துவந்த என்னிடம் இருந்ததோ 50 ரூபாய். தேவியில் சினிமா பார்ப்பதாக திட்டம் வேறு. நடைபாதையோரம் தள்ளு வண்டியில் சீப்பு சீப்பாய் பச்சை வாழைப்பழம் கண்ணில் பட்டது. டஜன் 18 ரூபாய் என கூவி விற்றுக் கொண்டிருந்தான் வண்டிக்காரன்.
கனிந்திருந்த வாழைப்பழ சீப்பிலிருந்து ஆளுக்கு இரண்டு பழம் பிய்த்து சாப்பிட்டோம். இரண்டாவது பழத்தை பாதி மட்டுமே தின்ற நிலையில் நண்பர் திணற, “என்ன மாம்ஸ், இரண்டாவதுக்கே இப்படி திணறுர” என்றேன் பெருமிதத்துடன்.
என் நையாண்டி, நண்பருக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், “பெரிசா பேசறியே, அதிகபட்சமா உன்னால எத்தனைப் பழம் சாப்பிட முடியும்…..ஒரு டஜன்?” வினவினார்.
நண்பரின் சவால் எனது ஈகோவை உசுப்பிவிட, “ஒரு டஜன் என்ன, இரண்டு டஜன் கூட சாப்பிட முடியும் என்னால்” என்றேன் காலரைத் தூக்கிவிடாதக் குறையாக.
“முடியாதுனு சொல்றேன், 50 ரூபாய் பெட் (BET) வச்சுக்கலாமா?” என்று புருவம் உயர்த்தினார்.
“வச்சுக்கலாம் தான். ஆனால் உங்கிட்ட ரூபாய் எங்க இருக்கு?”
“இதோ இந்த வாட்சை பெட் வைக்கிறேன்.” என்று புன்னகைத்தபடி கையிலிருந்த ரிஸ்ட் வாட்சை கழற்றி, தள்ளுவண்டி மீது வைத்து, கடைக்காரரிடம் சவாலை சொன்னார்.
யோசித்தேன்….போனால் 50 ரூபாய். வந்தால் ஒமேகா வாட்ச். எப்படியும் 500 ரூபாய் இருக்கும்.
சம்மதித்தேன்.
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என அடுத்தடுத்து உள்ளுக்குள் போனது. வெற்றிகரமாக ஒரு டஜனைக் கடந்து 14வதை காலிசெய்தேன். அடுத்த பழத்தின் தோலுரிக்க எத்தனிக்கையில், வயிறு நிரம்பி, தொண்டைக் குழிவரை வந்து, ‘இருக்கவா, வெளியேறவா?’ என்பதுபோல் அழிச்சாட்டியம் செய்தது முன்னர் தின்ற பழம். அதை வயிற்றுக்குள் இறக்கி, மீதமிருக்கும் எட்டை தின்பது இயலாதென்பது அப்பட்டமாகத் தெரிந்தாலும், கடைக்காரர் தந்த ஆலோசனைப்படி, இங்குமங்குமாய் நடந்தபோது (அசவுகரியத்துடன் தான்) அருகிலிருந்த ஒரு சிலரின் வேடிக்கைப்பொருளாக ஆனதை கவனித்தேன்.
நண்பர் முகத்தில் மந்தகாசப் புன்னகை. “இப்ப கூட ஒண்ணும் கெட்டுப் போயிடல. முடியலேனு சொல்லிடு. இத்தோடு நிறுத்திக்குவோம்.”
தோற்க மனமில்லை என்றாலும், நாலு பேர் முன்னிலையில் வாந்தியெடுப்பது அதைவிட அசிங்கம் என்பதால் தோல்வியை ஒப்புக்கொண்டேன்.
என் 50 ரூபாயில் வண்டிக்கடைக்காரருக்கு செட்டில் செய்தார் நண்பர். அங்கிருந்து PRR & Sons நோக்கி நடையைக் கட்டினோம். “சினிமா” என்று நண்பர் மெல்ல இழுத்தார்.
“நானிருக்கும் நிலைக்கு சினிமா ஒன்று தான் கேடு” அவசரமாய் மறுத்தேன்.
“அப்படினா ஒண்ணு செய்வோம்” என்ற நண்பரின் விருப்பப்படி, D1 காவல் நிலையம் எதிரில் இருந்த காரனேஷன் தர்பார் ஓட்டலுக்குள் நுழைந்தோம்.
நடந்த களைப்பிற்கு ஒரு டீ சாப்பிட விரும்பினேன். டீ பிரியரான நண்பரோ என் எதிர்பார்ப்பிற்கு மாறாக சிக்கன் பிரியாணி அரை பிளேட் ஆர்டர் செய்தார். பிரியாணி வந்ததும், “நீயும் கொஞ்சம் சாப்பிடறியா?” என்றார். நான் மறுத்ததையடுத்து, “சரி, டீயாவது சாப்பிடு” என்று ஆர்டர் சொல்லிவிட்டு, தனக்கு வந்த பிரியாணியை எதிரில் உட்கார்ந்தபடி ரசித்து, ருசித்து சாப்பிட்டார்.
பிறகு பேருந்து ஏறி அருகருகே அமர்ந்தோம். ஆனாலும், பேசிக்கொள்ளவில்லை. என்மீது நான் வைத்திருந்த அதீத நம்பிக்கை புஸ்வாணமாகி இருக்க, என்னுடைய சட்டைப்பையைப் போல் மனதும் வெறுமையாய் இருந்தது. பீச் ஸ்டேஷன் பேருந்து நிறுத்தம் வந்ததும், நண்பர் தன்னிடம் 50 ரூபாயில் மீதமிருந்த சில்லறையை என் சட்டைப்பையில் திணித்துவிட்டு, “சீ யூ, பை” என்று சொல்லி சென்றுவிட்டார்.
அதன் பிறகு, எத்தனையோ தடவை அவர் வீட்டிலும், ஓட்டலிலும் பிரியாணி சாப்பிட்டிருக்கிறோம். ஆனால் அன்றொரு நாள், நான் மிகவும் அசவுகரியமாக இருந்த நேரத்தில், என்னை வெறுப்பேற்றும் வகையில், சிக்கன் பிரியாணியை அவர் ஒரு கை பார்த்ததை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அதுவே, நான் ஜெயித்து, அவர் தோற்றிருந்தால், தான் பந்தயம் கட்டியபடி வாட்சை எனக்குத் தந்திருப்பாரா? என்ற கேள்வியும் எனக்குள் எழாமலில்லை.
Saturday, March 17, 2012
Subscribe to:
Posts (Atom)
